இன்று இந்திய அரசியல் சாசன தினம்.
எத்தனை சோதனைகள் வந்தாலும் நமது அரசியல் சாசனம் இறுதி நிமிடத்தில் தப்பி பிழைத்து விடுகிறது. இது நமக்கு பெரிய ஆறுதல்.
மகாராஷ்ட்ராவில் நடந்ததை பார்த்தோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது கட்சிகளின் நியாயமான ஆசை. அது வெறியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதற்கு மும்பய் சம்பவங்கள் புதிய உதாரணம்.
கவர்னர் என்பவர் மத்திய அரசின் ஒரு பிரதிநிதிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், அந்த பதவிக்கு இருக்கிற கவுரவத்தை காப்பாற்றும் விதமாக நடிக்கவாவது தெரிந்தால் நல்லது. மாநில தலைநகரங்களுக்கும் டெல்லிக்கும் தூரம் அதிகம். பிரதமரை காட்டிலும் கவர்னருக்கு உள்ளூர் நிலவரம் தெளிவாக தெரியும். தெரிந்திருக்க வேண்டும்.
கவுரவம் சீர்குலையும் என்று தோன்றினால், டெல்லியிடம் எடுத்து சொல்லி தடுத்திருக்க வேண்டும். தெரிந்து தடுக்கவில்லையா, அவருக்கே தெரியாதா என்பது நமக்கு தெரியவில்லை. மொத்தத்தில் தனக்கும் தன்னை அந்த பதவியில் நியமித்தவர்களுக்கும் பெரிய தர்மசங்கடத்தை உருவாக்கி விட்டார்.
அரசியல்வாதிகளை பற்றி விவாதிக்க அவசியம் இல்லை. அவர்கள் அப்படித்தான். நாடு செய்த புண்ணியம், நமக்கு நல்ல நீதிபதிகள் வாய்த்திருக்கிறார்கள்.